நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் (9.6.2022) இன்று நடந்தது. இந்த நிகழ்வை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு படம் பிடிக்கும் பொறுப்பை கவுதம் மேனன் ஏற்றுக்கொண்டார். இன்று அதிகாலை முதலே திருமணம் நடைபெறும் வடநெம்மேலி பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் மட்டும் தனியார் ஓட்டலை ஆக்ரமித்திருந்தனர். காலை 8.45 மணி முதல் திருமண சடங்குகள் நடக்கத் தொடங்கியது. விக்னேஷ் சிவன் பட்டு சட்டை, பட்டு வேஷ்டி அணிந்திருந்தார். நயன்தாரா பட்டுச்சேலை அணிந்து காட்சியளித்தார். 10.25 மணியளவில் நயன்தாரா கழுத்தில் இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். திருமண நாளான இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 16 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், முக்கிய கோயில்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து வழங்க ஏற்பாடு செய்து உள்ளார்கள்.
காலை 9 மணியிலிருந்து திரையுலகினர் வரத்தொடங்கினர். நடிகர்கள் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், அட்லி, எஸ்.ஜே. சூர்யா, ஏ.எல்.விஜய், போனி கபூர் மற்றும் திரை உலக பிரமுகர்கள், குடும்பத்துடன் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.